சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாய் நளினி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதியுடன் வாக்களித்தார். காரைக்குடி கண்டனூரில் சிட்டாள் ஆச்சி உயர் நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள். வருமானவரித் துறை ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இது வெளிப்படையாகவே புரிகிறது.
வருமானவரித் துறை மட்டுமல்ல அரசாங்கத்தில் உள்ள அனைத்து அங்கங்களும் இந்த அரசிற்கு துணையாக செயல்படுகின்றன. அதையும் மீறி தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தருவார்கள். 2004ஆம் ஆண்டு தேர்தல் எப்படி இருந்ததோ அதேபோல்தான் 2019 தேர்தலும் தமிழ்நாட்டில் இருக்கும். எதிர்க்கட்சிகளை ஏதாவது செய்ய வேண்டும் என்று அச்சுறுத்தல் செய்கிறார்கள். மற்ற நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றிபெறுவார்கள்” என்றார்.