சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியிலுள்ள இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் 29 வீரர்கள் பயிற்சியை முடித்துள்ள நிலையில், பணிக்குச் செல்லும் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பயிற்சி மையத்தில் 16 வாரங்கள் அளிக்கப்பட்ட கடின பயிற்சி நிறைவுற்றதை தொடர்ந்து, அவர்களை எல்லைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சி மையம் 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இங்கு, 16 வாரங்களாக துணை நிலையிலான கமாண்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அலுவலர்களாக 29 பேர் பயிற்சி பெற்றனர்.
இவர்களுக்கான பயிற்சி முடிவடைந்ததையடுத்து, இவர்களை நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். இவ்விழாவுக்கு, இலுப்பக்குடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டி.ஐ.ஜி. ரன்வீர் சிங் தலைமை வகித்தார். பயிற்சி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், சாகச நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்குப் பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர், வீரர்கள் கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்துக்குள் பாய்ந்து சாகசம், துப்பாக்கிகளை கையாளுதல், நடனம் உள்ளிட்ட சாகசங்களை செய்து காண்பித்தனர்.