தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
இதில், வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் ஹெச்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம், அமமுக தேர்போகி பாண்டி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேர்போகி பாண்டி கூறியதாவது, "இன்றைய வேட்புமனு பரிசீலனையில் எனது மனு ஏற்கப்பட்டுவிட்டது. புது சின்னம் வழங்குவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்துள்ளோம்.இன்னும் இரண்டு தினங்களில் எங்களின் சின்னம் என்ன என்பது தெரிந்துவிடும்.
சின்னம் கிடைத்தவுடன் டிடிவிதினகரனின் உத்தரவுப்படி சிவகங்கை தொகுதியில் பரப்புரையைத் தொடங்கிவிடுவோம். குக்கர் சின்னம் கிடைத்தாலும் கிடைக்கும். இல்லை என்றால் குண்டூசி சின்னத்திலாவது நின்று வெற்றிபெறுவோம். தேர்தல் ஆணையம் மனது வைத்தால் பொது சின்னம் குக்கராகக் கூட கிடைக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.