சிவகங்கை: காங்கிரஸ் கட்சி எம்பி கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளை எழுப்பக் கூடாது என்பதற்காக ராகுல் காந்தி பதவியைத் தகுதி இழப்பு செய்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற தண்டனை கொடுத்தது கிடையாது. தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான காரணத்தை உருவாக்கி உள்ளார்கள்.
ராகுல் காந்தியைத் தகுதி இழப்பு செய்ததற்கு மறியல் செய்வது மட்டுமே போராட்டம் கிடையாது. செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுப்பதும் ஒரு வகை போராட்டம் தான். கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது தான் போராட்டம். அதைத் தமிழகத்தில் காங்கிரஸ் செய்து கொண்டு இருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களில் வென்று தனித்து ஆட்சி அமைக்கும். பாஜக 60 இடங்களுக்குள் தான் வெற்றி பெறும். பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் அரசியலில் எந்த மாற்றமும் வராது. வளர்ச்சித் திட்டங்கள் வராததால் சிவகங்கை மக்களின் ஏமாற்றம் நியாயமானது தான். மக்களின் வேதனையும், ஏமாற்றமும் எனக்குப் புரிகிறது. சிவகங்கை மக்களவை தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சமமாகத் திட்டங்கள் வர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
தமிழக அரசு நிர்வாக காரணங்களால் சில முடிவுகளை எடுத்திருக்கலாம். பெண் காவலர் பயிற்சி கல்லூரி சிவகங்கையில் விரைவில் தொடங்க முதல்வரை வலியுறுத்துவேன். சிவகங்கை மாவட்டத்தில் பழங்கால வீடுகள், கோயில்கள் உள்ளன. அதனால் இங்கு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். ரயில்வே தொடர்பாக 42 கோரிக்கைகள் கொடுத்துள்ளேன். ஆனால், ஏதாவது காரணம் கூறி செய்ய மறுக்கின்றனர்” என்றார்.
மேலும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்று ஹெச்.ராஜா கூறியதற்கு, “மக்களுக்காகப் பேசும் தகுதி அவருக்கு இருக்கிறதா என நான் கேள்வி எழுப்புகிறேன் என்றார். மேலும், தேர்தல் அரசியலிலிருந்து விலகும் ஹெச்.ராஜா சர்வதேச அரசியலில் ஈடுபடுவதற்கு வாழ்த்துகள்" என கிண்டலாக பதிலளித்தார்.