சிவகங்கை: திருப்புவனம் பகுதியில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது, காங்கிரஸ் தொண்டர் கை நீட்டி கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரின் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சா. மாங்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
அப்போது முன்னாள் தேவகோட்டை நகர மன்ற தலைவர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தாலும் தாங்கள் தற்போது ஒதுக்கப்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளுக்கு எதற்கும் அழைப்பதில்லை என்று கார்த்தி சிதம்பரம் முன்பு குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டனர். இதில், சுமார் 4 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிரிச்சது ஒரு குத்தமாய்யா... போர்க்களம் பூண்ட உணவகம்!