சிவகங்கை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மேலும் 7 ஆயிரத்து 457 பயனாளிகளுக்கு, 29 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்ய முடிகிறது. காவிரி குண்டாறு திட்டம் ஜனவரி மாதம் சுமார் 14,500 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட உள்ளது.
வரலாற்று புகழ் பெற்றவர்களை கெளரவிக்கும் வண்ணம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார், பரமசிவம் சுப்பராயன் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்களது முழு உருவ படங்களும் சட்டப்பேரவையில் வைக்கப்படும்.
தேவேந்திர குல உட்பிரிவு சாதிகளை ஒன்று இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்” என்றார்.
ரஜினி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ரஜினிகாந்த் முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அதுகுறித்து பின்பு பார்க்கலாம் என்றவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவருடைய விருப்பம் எனவும், துணை முதலமைச்சர் அதுகுறித்து கருத்து கூறியிருந்தால், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார்.