சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் தனது தந்தையுடன் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த நதியா ஸ்ரீ என்பவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது கணவர் உயிருடன் இருக்கும்போதே, அவரது மனைவி தனது கணவர் இறந்து விட்டதாக காரைக்குடி நகராட்சியில் பதிவு செய்து இறப்புச் சான்றிதழும், வருவாய்த்துறை மூலம் வாரிசு சான்றிதழும் பெற்றுள்ளார்.
இதன் மூலம் தனது கணவரான சந்திரசேகர் பெயரில் இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் பிரிந்துள்ளனர். தற்போது தனது பெயரில் உள்ள அதே இடத்தை சந்திரசேகர் விற்பனை செய்ய முற்பட்டுள்ளார்.
அப்போது தனது மனைவி தனக்கு இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று ஏற்கனவே இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே தனது மனைவி மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தற்போது தனது மனைவியின் தரப்பு தொடர்ந்து தன்னை மிரட்டுவதாகவும், மேலும் தனது மனைவி வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர், “நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இதனை அறிந்து கொண்ட சில அலுவலர்கள் மனு பதிவு செய்யும் இடத்தில், அந்த மனுவை பெற்றுக் கொண்டு பதிவு செய்யாமல், ‘நீங்கள் காரைக்குடிக்கு வாருங்கள்.
உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறோம்’ என கூறி மனுவை எடுத்துச் சென்று விட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தபோது மீண்டும் மனுவை பதிவு செய்யச் சொல்லி மனுவை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும், எனது மனைவியின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நண்பர்களுடன் சவால்... காதலியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது...