சிவகங்கை: சிவகங்கை அடுத்து கீழப்பூங்குடி அருகே திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவர் உடல்நலக் குறைபாடு காரணமாகத் தவித்துவருகிறார்.
விபத்தில் செயலிழந்த உடல்
லெட்சுமணன் குடும்ப வறுமை காரணமாக எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே வேலைக்குச் சென்றுவிட்டார். கோவையில் பஞ்சர் கடையில் வேலை பார்க்கும்போது இருசக்கர வாகனத்தில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு கோமாவிற்குபோன அவர் சில வாரங்களில் நினைவு திரும்பினார்.
ஆனால் தற்போது அவருக்கு 25 வயது ஆகியும் வாழ்க்கையில் மீள முடியவில்லை. விபத்து ஏற்பட்ட லெட்சுமணனுக்கு இடுப்புக்கு கீழ் எதுவும் வேலை செய்யாது. சிறுநீர் கழிப்பும், மலம் கழிப்பும்கூட அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.
லெட்சுமணனுக்கு தாய் இல்லாத சூழலில் தந்தையும் ஆதரவு இல்லை. தனது சகோதரிகளின் ஆதரவில்தான் வாழ்ந்துவருகிறார். லெட்சுமணனுக்கு மூன்று சகோதரிகள். அக்காவிற்கு திருமணமான நிலையில் தங்கையில் ஒருவர் சென்னையில் பணி செய்கிறார். மற்றொரு தங்கை கூலி வேலைக்குச் சென்று வீட்டையும் லெட்சுமணனையும் பார்த்துக் கொள்கிறார்.
உழைத்து வாழ முயற்சி
லெட்சுமணனுக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை கிடைத்தாலும் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. லெட்சுமணன் தவழ முடியாத சூழலிலும் பூக்கட்டுவது, பஞ்சர் பார்ப்பது என முடிந்த வேலையைச் செய்துவருகிறார். அவருக்கு மாற்றுத்திறனாளி வாகனம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
அந்த வாகனம் கிடைத்துவிட்டால் வெளியே சென்று தொழில் செய்ய முடியும் என்று கூறும் அவரால் சிறுநீர் கழிக்க முடியாத, மலம் கழிக்க முடியாத நிலையிலும் உழைத்து வாழ முயற்சி எடுத்துவருகிறார். அவரின் நம்பிக்கைக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
இதையும் படிங்க: லதா மங்கேஷ்கர் மறைவு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி