கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா மட்டுமல்லாது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உயிரிழப்பு அதிகரித்துவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலை, பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக மூடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தற்பொழுது ஆக்சிஜன் இலவசமாக தயாரித்து வழங்குவதாகவும், அதற்கு ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக மத்திய அரசு இதற்கு இசைவு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டத்திலும் திமுக உட்பட முக்கிய கட்சிகள் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்றவை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் கடந்த 28ஆம் தேதி தமிழக மக்கள் மன்றம் சார்பில் அதன் தலைவரும் மக்கள் நீதி மன்ற காரைக்குடி வேட்பாளர் ச.மி.இராசகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் ஆம் ஆத்மி, தமிழ்தேச மக்கள் கட்சி, பச்சைத்தமிழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழ்தேசிய கலை இலக்கிய பண்பாட்டு கழகம் மற்றும் தமிழிய சிந்தனைக்களம் போன்ற அமைப்புகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 19 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் அபிநயா கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.