சிவகங்கை: அரளிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் இன்று (அக்.31) நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இல்லம் தேடி கல்வித்திட்டம் குறித்து பேசி, இது கட்சியின் ஆட்சி அல்ல, சமுதாயத்தின் ஆட்சி. ஒரு காலத்தில் கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்தது. அதை ஏழை எளியவர்களுக்கும், பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து திராவிடத்தை முதலமைச்சர் உணர்த்தியுள்ளார். சீமானை பொறுத்தவரையில் நல்ல காரியங்கள் எது செய்தாலும் அதை எதிர்ப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான ஊதியம், நிலுவைத்தொகை குறித்து ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். தீபாவளிக்குள் ஊதியத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டாசு கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு; சரவெடிகள் பறிமுதல்