சேலம் அன்னதானப்பட்டி அருகில் உள்ள மணியனூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்( வயது 26). இவரது தந்தை மணியின் வெள்ளி பட்டறையில் பணியாற்றி வந்தார்.
கலையரசனுக்கு திருமணம் செய்ய, அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் வரன் பார்த்து வந்தனர். ஆனால் கலையரசன் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறி, அவர் திருமணத்தை தள்ளி வைத்து வந்தார்.
ஆனால் பெற்றோர் தொடர்ந்து அவருக்கு மணப் பெண் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை (ஆக.5) கலையரசன் வெளியில் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றார் .
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கலையரசனை அக்கம்பக்கம் தேடினர். ஆனால் கலையரசனை எங்கும் காணவில்லை.
அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு பகுதிகளில் கலையரசனை தேடினர்.
இந்த நிலையில் நேற்று (ஆக.6) பிற்பகலில் கலையரசன் சேலம் திருவாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ரயில் பாதை அருகே இருக்கும் முட்புதர் அருகில் விஷம் அருந்தி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதை அறிந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் உடனே சம்பவ இடம் வந்து கலையரசனின் சடலத்தை மீட்டனர்.
பின்னர் கலையரசன் சட்டைப் பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி அதில் இருந்த முகவரியை கொண்டு விசாரித்தனர். அதில் இறந்து கிடந்தது கலையரசன் எனத் தெரியவந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு கலையரசன் பெற்றோர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கலையரசனின் சடலத்தை பார்த்து இறந்து கிடந்தது கலையரசன் என அடையாளம் காட்டினர்.
பின்னர் கலையரசன் சடலம் உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலையரசன் அவரது சட்டைப்பையில் எழுதியிருந்த கடிதத்தில் " என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. அதற்கு நான் தகுதியற்றவன். எனக்கு ஆண்மை தன்மை இல்லை. நான் திருமணம் செய்தால் அது வீணாகிவிடும் .
என்னை மன்னித்துவிடுங்கள். தங்கைக்கு திருமணம் செய்து வையுங்கள்" என உருக்கமாக ஒரு பக்கத்திற்கு கலையரசன் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தை சேலம் நகர உதவி கமிஷனர் ஈஸ்வரன் கைப்பற்றி தற்போது விசாரணை செய்து வருகிறார்.