சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வாழகுட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பொறியியல் பட்டதாரியான இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. அவர்களின் கவர்ச்சிகரமான பேச்சை நம்பிய சக்திவேல், சுமார் 14 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
பின்னர், அவருக்கு கள்ளக்குறிச்சியில் பொதுப் பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறி போலியான பணியாணை மற்றும் அடையாள அட்டையையும் அந்த கும்பல் வழங்கியுள்ளது. இதனை நம்பி சக்திவேல் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் பணியில் சேர சென்ற போது, அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
ஏமாற்றமடைந்த சக்திவேல் அந்த கும்பலைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் முறையான பதிலளிக்காமல் அலட்சியமாகப் பேசி பணத்தையும் திருப்பி அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்குள்ளான அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சக்திவேல் தற்கொலை செய்வதற்கு முன் தனக்கு நேர்ந்த அநீதியைக் கூறி காணொளியையும் எடுத்து வைத்திருந்தார்.
ஆனால் காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில் சக்திவேலின் இறுதி நேர காணொளிப் பதிவை அழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேலின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக்திவேலின் உடலுடன் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதானம் அடையாமல் மாவட்ட அலுவலர் உடனே இங்கு வரவேண்டும் எனக்கூறி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து உயர் அலுவலர்கள் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டனர். பின்னர், சக்திவேல் உடல், உடற் கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.