சேலம் அருகே சின்ன வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (22). எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று (அக்.16) வாய்க்கால் பட்டறை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாபு என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் முத்துக்குமார் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமாரை, உடன் பணியாற்றியவர்கள் காப்பாற்றி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காததால் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு முத்துக்குமாரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், செல்லும் வழியிலேயே முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்துக்குமாரின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் அனைவரும் ஆவேசமாகி, முத்துக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், சேலம் டவுன் காவல்துறை நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.
அதனையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இளைஞர் மரணம் குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.