சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடியைச் சேர்ந்த, பிரபாகரன் என்பவர் மகன் பிரகாஷ் (19). இவர் சேலத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பி.இ. இரண்டாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறையையொட்டி பிரகாஷும் அவரது கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேரும், கல்வராயன்மலை, நாகலூர் வனப்பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் மாலை 5 மணிக்கு, அருவியின் தண்ணீர் கொட்டும் இடத்தின் மேற்பகுதிக்கு பிரகாஷ் சென்றுள்ளார்.
அப்போது, தண்ணீர் வரும் பாதையை எட்டிப்பார்த்தபடி பிரகாஷ் தனது செல்ஃபோனில் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரகாஷ் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதைக் கண்ட பிரகாஷின் நண்பர்கள் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்து உதவி கேட்டுள்ளனர். 20 மணி நேரத் தேடுதலுக்கு பின்னர் பிரகாஷ் சடலமாக மீட்கப்பட்டார். பின், அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. செல்ஃபி மோகத்தால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: