கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று நாடு முழுவதும் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி, சேலத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், சேலத்தின் முக்கிய பகுதிகளான மூன்று ரோடு, திருவாகவுண்டனூர் புறவழிச்சாலை, அரசு தலைமை பொது மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில்வே ஜங்ஷன், ஓமலூர் சுங்கச் சாவடி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
அதேபோல், அனைத்து உணவகங்களும் மூடப்பட்ட நிலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.
இதைக் கண்ட காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, அந்த இளைஞர் தகாத வார்த்தைகளால் காவலர்களை திட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த இளைஞரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பதும் மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ரூபாய் நோட்டு மூலம் பரவுமா கரோனா - அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்!