சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள மோலாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், உடல்நிலை சரியில்லாததால் கடந்த வாரம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு தனது 16 வயது மகளுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கே புளியம்பட்டி மாதையன் மகன் கணபதிக்கு அந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசிப் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கணபதி, அந்தச் சிறுமிக்கு போன் செய்து தனியாக வருமாறு அழைத்துள்ளார். அப்போது அங்கே வந்த சிறுமியை கணபதி, மோட்டார் சைக்கிளில் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், சிறுமியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்து மீண்டும் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கணபதி தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், கணபதி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கணபதியை கைது செய்த காவல் துறையினர் ஓமலூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் குடோனில் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்த இளைஞர்!