சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாசவராஜ். இவர் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தைகள் இல்லை என தெரிகிறது.
இதனையடுத்து, குழந்தை வேண்டி கடந்த ஒரு ஆண்டாக செல்வி பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 15ஆம் தேதி மனைவி செல்வியை காணவில்லை என தாரமங்கலம் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கு இடையே, இளம்பிள்ளை அருகே திருமலை கிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில், இளம் பெண் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், அந்தப் பெண்ணின் உடலை மீட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த பெண் தாரமங்கலம் பகுதியில் மாயமான செல்வி என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது செல்வியின் உடலில் காயங்கள் எதுவுமில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளமும் இல்லை, எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வியை கொலை செய்தது அந்த பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரி என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பூசாரியை பிடித்து விசாரணை நடத்தியபோது, செல்விக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை இளம்பிள்ளை அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொலை தொடர்பாக கோயில் பூசாரியின் கூட்டாளி ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தந்தையைக் கொன்ற 17 வயது மகன்.. பின்னணி என்ன?