தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் தீபாவளிப் பண்டிகை களை கட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் நேற்று நள்ளிரவு முதலே உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், கோவில் வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கவனிப்பார் யாருமின்றி இருந்த ஆதரவற்றோருடன் சேலம் இளைஞர் குழுவினர் தீபாவளியை கொண்டாடியது பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சேலத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் சேலம் இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சாலையோரங்களில் ஆதரவற்று இருந்தவர்களுக்கு முடிதிருத்தம் செய்து குளிக்கவைத்தனர். அதையடுத்து, அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், மூன்று வேளை உணவுகளை வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதனைத்தொடர்ந்து, சேலம் இளைஞர்களின் இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இதுபோன்ற பொது சேவையில் ஈடுபட்டால் தமிழ்நாடு ஆதரவற்றவர்களே இல்லாத மாநிலமாக உருவெடுக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘சுஜித்தை மீட்கும் வரை தீபாவளி இல்லை’ - சொந்த கிராம மக்கள் உருக்கம்!