சேலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளன. இதனால், பொதுமக்கள் நீர்நிலைகளில் நீச்சல் அடித்து குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி பகுதியிலுள்ள புது ஏரியில் இரண்டு இளைஞர்கள் நேற்று (அக்.07) மாலை மது அருந்திவிட்டு, நீச்சல் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சேலம் சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ் என்பவர், ஏரியின் நடுப்பகுதி வரை சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, ஏரியில் மூழ்கினார். பின்னர், அவரது நண்பர்கள் நாகராஜை மீட்க போராடி வந்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை, தீயணைப்புத் துறையினர் நாகராஜ் உடலை மீட்க பல மணி நேரம் போராடினர்.
ஆனால், புது ஏரி தற்போது நிரம்பி வழிவதால் ஏரியில் மூழ்கிய நாகராஜ் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரண்டாவது நாளாக இன்று (அக்.08) தீயணைப்புத் துறையினர் நாகராஜின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு