சேலம் அருகே உள்ள கருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சுற்றி திரிந்தார். தனியாக வந்த அந்தப் பெண்னை பார்த்த கருப்பூர் காவல்துறையினர், அவரை அழைத்து விசாரித்தனர்.
அதில், அந்த பெண்ணின் பெயர் ரீபா (எ) ராணி என்றும், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர மாநிலம் குண்டூரில் வீட்டுவேலைக்காக வந்திருப்பது தெரியவந்தது.
அங்கு அந்த பெண்ணும், இளைஞர் ஒருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அந்த இளைஞர், ரீபாவை குண்டூர் ரயில் நிலையத்திற்கு வருமாறும், ஐதராபாத் சென்று திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி குண்டூர் ரயில் நிலையம் வந்த ரீபா, காதலன் வராததால் நீண்ட நேரம் ரயில் நிலையத்திலேயே காத்திருந்திருக்கிறார். பின்னர் அவ்வழியாக வந்த ரயிலில் ஏறி சேலம் வந்து, நடந்தே கருப்பூர் வந்தார்.
கருப்பூர் காவல்துறையினர், காதலனை தொடர்புகொண்டபோது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சேலம் ரயில் நிலையம் வந்த இளம்பெண் ரீபா, எங்கு செல்வது எனத் தெரியாமல் நடந்து திரிந்ததை அறிந்த காவல்துறையினர், அவரை சேலம் கோரிமேடு பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
ரீபாவின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ வந்தால் அவரை அனுப்பி வைக்க காவல்துறையினர் முடிவுசெய்துள்ளனர். மேலும் ரீபா சேலத்தில் உள்ளது குறித்து குண்டூர் காவல்துறையினருக்கும், ஐதராபாத் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தர்ஷன் மேல தப்பு இருக்கு' - சனம் ஷெட்டிக்கு அட்வைஸ் செய்த காஜல்