சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா சோதனையில், 57 வயதுடைய வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் சேலம் அம்மாப்பேட்டையில் இருந்து தினசரி பணிக்கு வந்து சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை அம்மாப்பேட்டை சுகாதாரத் துறையினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின்னர் மாலை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துசென்ற நோயாளிகள், அவர்களின் உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் வந்த கர்ப்பிணிகளின் வீடுகளுக்கேச் சென்று கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு இருவர் உயிரிழப்பு:
சேலத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட இருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில், 17 இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்களை கண்காணித்துவருகின்றனர். இதையடுத்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சின்னப்புதூரைச் சேர்ந்த 52 வயது முதியவர் கரோனா பாதித்திருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இவர் ஏற்கெனவே கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுபோல ஆத்தூரைச் சேர்ந்த 57 வயது பெண் கரோனா தொற்று பாதித்த நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் சிறுநீரக செயலிழப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சேலம் இதுவரை ஐந்து பேர் கரோனா தொற்று பாதித்து இறந்து உள்ளனர்.
இதையும் படிங்க... ஏற்காட்டில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி