சேலம் மாவட்டம், ஏற்காடு மலை நகரைச் சுற்றி, 67 மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைப் பகுதி முழுக்க, காஃபி, மிளகு, ஏலக்காய், லவங்கம் ஆகிய மலைப்பயிர்கள் பயிரிடப்பட்டுவருகின்றன. ஏறத்தாழ 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சேர்வராயன் மலைத் தொடர் முழுவதும் எஸ்டேட்டுகள் அமைக்கப்பட்டு காஃபி பயிரிடப்பட்டு வருகிறது.
ஏற்காடு, அதனைச் சுற்றியுள்ள மலை கிராமப் பகுதிகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஏற்காடு அடுத்த மஞ்சக்குட்டை அருகில் உள்ள அசம்பூர் மலைக்கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பத்தோடு காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அசம்பூர் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் தனியார் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர், சுமார் மூன்று ஏக்கர் அளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, காஃபி, மிளகு பயிரிட்டு வருவதாக அசம்பூர் மக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆக்கிரமிப்பு நிலத்தில் தங்களுக்கு குடிசை அமைத்து வாழ அனுமதி அளிக்குமாறு, ஏற்காடு தாசில்தார், சேலம் ஆட்சியரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர். மனு குறித்த எந்தவித பதிலும் அரசு தரப்பில் அளிக்காத நிலையில், கிராம மக்கள் இன்று தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தில் நுழைந்து குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
200க்கும் மேற்பட்ட அசம்பூர் மலைக் கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அரசு நில ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டம் நடத்தியதால் அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ஏற்காடு காவல்துறையினர் மலைக் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் ஏற்காடு வட்டாட்சியர் நேரில் வந்து தங்களுக்கு விளக்கம் அளித்து இந்த பகுதியில் குடிசை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கும் வரை இடத்தை விட்டு அகல மாட்டோம் என்று கூறி குடியேறும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏற்காடு தாசில்தார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மக்களுக்கு எந்த முடிவையும் கூறாமல் ஏற்காடு தாசில்தார் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், தாசில்தாரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
தற்கொலைக்கு முயன்றவரை ஏற்காடு காவல்துறையினர் மீட்டு சமாதானம் செய்து வைத்தனர். தொடர்ந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஏற்காடு காவல்துறையினர் தாசில்தாருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு ஏற்காடு தாசில்தார் அலுவலகம் சென்றனர். அங்கு தாசில்தார் தரப்பிலிருந்து கரோனா பெருந்தொற்று காலம் முடியும்வரை மலைக்கிராம மக்களுக்கு பட்டா எதுவும் வழங்க இயலாது என்று பதிலளிக்கப்பட்டதால், அசம்பூர் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
போராட்டம் குறித்து பேட்டியளித்த அசம்பூர் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் கூறுகையில், "ஆண்டாண்டு காலமாக ஏற்காடு மலைப்பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களின் முன்னோர்கள்தான் இந்தப் பகுதியில் எஸ்டேட்டுகள் அமைய கூலிவேலை செய்து, வாழ்க்கை முழுக்க கூலியாகவே வாழ்ந்து இறந்தனர். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக எங்களுக்கு வேலை வாய்ப்பு, முழுமையாக இல்லாமல் போய்விட்டது.
இதனால், வீட்டு வாடகை கொடுக்க இயலாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம். இந்த நிலையில் தனியார் எஸ்டேட் ஆக்கிரமித்துள்ள நிலத்தில் நாங்கள் குடிசை அமைத்து வாழ்வதற்கு அரசு உதவி செய்ய வேண்டும், எங்களின் உரிமையை அரசு எங்களுக்கு வழங்கிட வேண்டும். ஆனால், ஏற்காடு தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதேபோல பெரியசாமி என்பவர் கூறுகையில், "சட்டத்திற்குப் புறம்பாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. அரசு நிலத்தில் பழங்குடியின மக்களை குடியேற ஏற்காடு தாசில்தார் அனுமதிக்கவில்லை என்றால் இதே பகுதியில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை" என்று வேதனை தெரிவித்தார். மீண்டும் மக்கள் போராடாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமணிமுத்தாறில் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பு - விவசாயிகள் வேதனை