ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்த நாளில் எய்ட்ஸ் பரவாமல் தடுத்தல், அதன் பாதிப்புகளைக் குறைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிவு காட்டுதல், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ராமன் வாசிக்க அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த விழிப்புணர்வுப் பேரணி, பெரியார் சிலை சாலை வழியாக சேலம் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியில் எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பாகச் சிகிச்சை வழங்கிய மருத்துவமனைகள் மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்வி நிறுவனங்களுக்குச் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மலர்விழி வள்ளல், அரசு பொது மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்கிட உலகளாவிய ஒற்றுமையை ஏற்போம்' - பட்நாயக் மணற்சிற்பம்