சேலம் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை, தன்னார்வ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனிதக் கடத்தலைத் தடுக்க பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில், சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.வி. சக்திவேல், வழக்கறிஞர் கந்தசாமி பிரபு, காவல் உதவி ஆணையர் நமசிவாயம், சமூகநலத் துறை அலுவலர் கிருத்திகா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், "மனிதக் கடத்தல் என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் நுணுக்கமாக நடைபெறுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார்கள். அதேபோல் பெண் குழந்தைகளை கடத்துவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கடத்தல்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு கடத்திச் செல்லப்படும் பெண்கள், கொத்தடிமைகளாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படுகிற அவலம் இருக்கிறது. எனவே, மனிதக் கடத்தல் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோர் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை அறிவுரைகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.