மகளிர் தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது. மகளிர் தினத்தன்று கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் உதயா எக்ஸ்பிரஸ் ரயிலை இரண்டு பெண்கள் இயக்க, சேலம் ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்தது.
இதனையடுத்து நிம்மி, சிந்து ஆகியோர் கோவையிலிருந்து சேலம் வரை உதயா எக்ஸ்பிரஸை ரயிலை இயக்கிவந்தனர். இதுபோல உதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று பணியாளர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் பெண்களாகவே பணியில் அமர்த்தப்பட்டனர்.
கோவையில் புறப்பட்ட இந்த ரயில் காலை எட்டு மணி அளவில் சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயிலை இயக்கிய நிம்மி, சிந்துவிற்கு ரயில் என்ஜினில் ஏறி சேலம் ரயில்வே கோட்ட அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலர்கள் கூறுகையில், "மகளிர் தினத்தையொட்டி கோவையிலிருந்து சேலத்திற்கு இரண்டு பெண்கள் ரயிலை இயக்கியது பெரிதும் பாராட்டுக்குரியது. இனி பெண்கள் தொலைதூர ரயில்களை இயக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.
கோவையில் இருந்து சேலத்திற்கு இரண்டு பெண்கள் ரயிலை இயக்கி வந்ததை அறிந்த திரளான பயணிகள் நிம்மி மற்றும் சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மகளிர் தினம் - ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்!