சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சித்தேரி மலைப் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் ராஜேஸ்வரி என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவி மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
பழனிவேல் பெற்றோர் அவ்வப்போது ராஜேஸ்வரியை சாதி பெயரைச் சொல்லி திட்டியும், வீட்டுக்குள் அனுமதிக்காமல் தனிமைப்படுத்தி கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ராஜேஸ்வரி கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதால் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு ராஜேஸ்வரி மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென்று ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், சேலம் அரசு பொது மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். "ராஜேஸ்வரியின் மரணத்தில் மர்மம் உள்ளது, அவரின் மரணத்திற்கு கணவர் பழனிவேலுவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம்" என்று கூறி ராஜேஸ்வரியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலம் டவுன் காவல் துறையினர், ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பழனிவேலு மற்றும் அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால், ராஜேஸ்வரியின் உடலை வாங்காமல் அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர். பழங்குடியின பெண் இறப்பால் சேலம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.