சேலத்தில் , சொந்த கார் வைத்திருக்கும் உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை போக்குவரத்துத் துறை அனுமதி பெறாமல் வாடகைக்கு விடுவதால், வாடகை கால்டாக்சி நிறுவனத்தினர் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர் எனவும், இதனால் உரிய நடவடிக்கை எடுத்து முறையற்ற வகையில் ' வாடகை கார் சேவை' வழங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா பொது ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழில்களும் பல்வேறு வகையில் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதிலும் சேவைத் துறைகள் மிகப்பெரும் இழப்பில் சிக்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 'கால் டாக்ஸி' 'கேப் சர்வீஸ்' தரும் தனியார் நிறுவனங்கள் மீண்டெழ முடியாத வகையில் வருவாய் இழப்புகளை சந்தித்துள்ளது என்று வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனத்தினர் கவலைத் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்கு கார் சேவை வழங்குவோருக்கும்; சொந்த கார்களை வாடகைக்கு விடுவோருக்கும் இடையில் உள்ள நீண்டகால முரண்பாடுகளை களைந்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை உறுதியான முடிவு எடுத்து , ஆயிரக்கணக்கான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் இந்தத் தொழிலையே நம்பி இருக்கும் வாகன உரிமையாளர்களை பாதுகாக்க வேண்டுமென்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தனியார் கால் டாக்சி நிறுவன உரிமையாளர் நித்தியானந்தம் கூறுகையில்," கடந்த 9 ஆண்டுகளாக வாடகை கார் சேவையை அளித்து வரும் மேங்கோ கால் டாக்சி நிறுவனத்தை நடத்தி வருகிறேன். ஏராளமான பயணிகள் தினமும் சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில், எங்களது வாடகை கார் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சொந்த கார் வைத்திருக்கும் உரிமையாளர்கள், தங்களது வருமானத்தை பெருக்குவதற்காக வாகனங்களை அரசு அனுமதி பெறாமல், வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். இதனால் இந்த தொழிலையே நம்பியிருக்கும் எங்களைப் போன்றவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசுக்கு முறையாக வரி செலுத்தி, வாடகை கார் சேவை வழங்கி வரும் எங்களைப் போன்றோர், இந்த கரோனா காலத்தில் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் முறையற்ற வகையில் சொந்த கார் வைத்திருக்கும் உரிமையாளர்களின், கார் சேவையால், போக்குவரத்துத் துறைக்கு தான் வருவாய் இழப்பு அதிகம் ஏற்படுகிறது.
இதை அரசு உணர வேண்டும். தொழில் ரீதியாக கார் சேவை வழங்கும் எங்களிடம் நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் இருப்பதால் பயணிகள் பயமின்றி பாதுகாப்பான வகையில் பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் சொந்த கார் வைத்திருப்போர் வாகனங்களை முறையாக பராமரிப்பதில்லை. அதனால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களால் விபத்து காப்பீடு பெற இயலாமலும் போகிறது. இதையெல்லாம் பயணிகள் உணரவேண்டும்" என்று அக்கறையோடு தெரிவித்தார்.
இந்த பிரச்னை குறித்து நமக்கு சிறப்புப் பேட்டி அளித்த சிஐடியூ சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாநில துணை தலைவர் தியாகராஜன் கூறுகையில் , "கரோனா நோய்த்தொற்று காலத்தில், வங்கிகளில் கடன் பெற்று, கார் வாங்கி, வாடகை கார் சேவை அளிப்பவர்கள் மிகுந்த பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளனர்.மாதம்தோறும் இஎம்ஐ கட்ட வேண்டிய நிலையில், அவர்கள் இருப்பதால் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு நிவாரண நிதியை உயர்த்தி, அதிகபட்ச தொகையாக வழங்க வேண்டும் . சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். பாஸ்ட் டாக் பொறுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. 'ஒரு வழிப்பாதை' என்பதை அரசு அனுமதிக்கக் கூடாது. கால் டாக்ஸி கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த தீர்க்கப்படாத வாடகை கார் சேவை பிரச்சனை குறித்து சேலம் மேற்கு ஆர்டிஓ தாமோதரன் கூறுகையில் ," வாடகைக்கு வாகன சேவை வழங்குவோருக்கும், சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்களுக்கும் இடையே உள்ள பிரச்னையைத் தீர்க்க முடியும் எனத் தோன்றவில்லை. ஏற்கெனவே பலமுறை சேலம் மாவட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அபராதம் விதிக்கப்பட்டும் சில நிர்ப்பந்தங்களால் சொந்தக் கார் வைத்திருப்போர், வாடகைக்கு விடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு செல்போன் வசதியும் பயணிகளின் ஆர்வமும் காரணமாக உள்ளது.
தொலைபேசி மூலம் கார் சேவை வேண்டும் என்று முன்பதிவு செய்பவர்கள் தற்போது குறைந்து விட்டனர். தங்களுக்குத் தேவையான நேரத்தில் சொந்தக்கார் வைத்திருப்போர் மற்றும் அவர்களின் ஓட்டுநர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டு வாசலுக்கு கார்களை வரவைத்து விரும்பும் இடங்களுக்குச் செல்லும் போக்கு, பொது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மஞ்சள் வண்ணம் கொண்ட டூரிஸ்ட் போர்டு உள்ள வாடகை கார்களை திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் விரும்புவது இல்லை.
வெள்ளை நிற போர்டுகள் கொண்ட தனியார் கார்களில் செல்வதையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். மஞ்சள் போர்டு கொண்ட காரில் சென்று சொந்தக்காரர் முன்பு நிற்பதை பொதுமக்கள் விரும்புவதில்லை. ஆனால், டூரிஸ்ட் போர்டு வாகனத்திற்கும் சொந்த காருக்கும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, ஏறத்தாழ ஒன்று தான். மூவாயிரம் அல்லது நான்காயிரம் ரூபாய் மட்டுமே வித்தியாசம் ஏற்படும். இதை இரண்டு தரப்புமே புரிந்துகொள்ளவேண்டும். கரோனா பொது ஊரடங்கு காலம் என்பதால், தற்போது சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை எதுவும் செய்ய இயலவில்லை. மிக விரைந்து இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு போக்குவரத்து துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புத்துயிர் தருமா புத்தாண்டு...? சீசனுக்காக காத்திருக்கும் வங்கக் கரையோர வியாபாரிகள்...!