சேலத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு அமெரிக்க மனிதநேய சங்கத்தின் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றதற்கான பாராட்டு விழா சேலம் மண்டல திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மோகன், இந்திய தேசிய காங்கிரஸ் சேலம் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாராட்டு விழாவுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, "தமிழ் வாழ்க என்று பாஜகவினர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட ஆய்வு துறை கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. அதை எல்லாம் விட்டவிட்டு வெறுமனே தமிழ் வாழ்க என்று கூறுவது பயனற்றது.
இரட்டை நாக்கு; இரட்டை போக்கு என்ற ரீதியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது. வள்ளுவர் சிலையை அவமதித்த அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று சிலைகளை அவமதிப்பவர்கள் இனி அவ்வாறு செயல்படாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தில் திராவிடர் கழகம் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு விதிவிலக்கு வேண்டும் என்று நீதிமன்றத்தில் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக நீதிபதிகளும் தற்போது ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்பாடு இல்லாத நீட் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே மீண்டும் தமிழ்நாட்டில்கூட இருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்விலிருந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்த வேண்டும். இதில் கட்சி பாகுபாடு எல்லாம் பார்க்கக் கூடாது" என்றார்.