சேலம்: உயிரே போனாலும் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலங்களை வழங்க மாட்டோம் என, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , "எட்டு வழி சாலை திட்டத்திற்கு 92 விழுக்காடு விவசாயிகள் நிலம் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மீதி உள்ள எட்டு விழுக்காடு விவசாயிகள் மட்டுமே போராடி வருகின்றனர்" என்று கூறினார். முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு:
இதைத்தொடர்ந்து, சேலம் பாரப்பட்டி , பூலாவரி, வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எட்டு வழிசாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தங்கள் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பத்தினர் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எட்டுவழி சாலை குறித்து ஒவ்வொரு அரசு விழாவிலும் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகிறார்.
எட்டு வழி சாலை திட்டத்திற்கு எந்த விவசாயிகளும் சம்மதம் தெரிவிக்காத நிலையில், 92 விழுக்காடு விவசாயிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. இது போன்ற காடுகளையும், இயற்கை வளங்களையும் அழித்து போடப்படுகின்ற சாலையை தடுத்து நிறுத்த வேண்டும். இச்சாலைக்கு எங்கள் உயிரே போனாலும், ஒரு பிடி நிலத்தை கூட வழங்க மாட்டோம்" என்றனர்.
இதையும் படிங்க: நாடகம் வேண்டாம்; வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்! - மு.க.ஸ்டாலின்