தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் அணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்சி நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சேலத்தில் 1330க்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி, தமிழ் சங்கம் அண்ணா பூங்கா வழியாக சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.