தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'திரௌபதி' படத்தை அனைத்து சமூக மக்களும் பார்க்க வேண்டும். பெண்கள் எப்படி வாழ வேண்டும், தந்தை தனது மகளுக்கு எப்படி திருமணம் செய்து தர வேண்டும், பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் என திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது பெண்கள் நாடகக் காதலில் சிக்கவைக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் துணிச்சலாக படத்தில் கூறப்பட்டிருக்கிறது. 'அசுரன்' படத்தை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்த்து ட்வீட் செய்திருந்தார். அதுபோல இந்தத் திரைப்படம் குறித்தும் அவர் ட்வீட் செய்ய வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்ற அனைவரும் 'திரௌபதி' படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சிஏஏ குறித்து விவாதிப்பதால் இருக்கக்கூடிய பயன்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சிஏஏ விஷயத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுப்பதால் தமிழ்நாட்டில் ஏற்படும் தாக்கம் கேள்விக்குறியாகவே உள்ளது. மத்திய அரசு இந்தச் சட்டத்தினை ஒருகாலமும் திரும்பப்பெறாது என சொல்லியிருக்கிறது. ஏனென்றால் இது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான சட்டம் என்று கூறியுள்ளது. ரஜினிகாந்தே சொன்னாலும் இந்தச் சட்டம் திரும்பப்பெறாது. இவர்கள் பிரதமர் மோடியை அனுகியிருந்தால் இந்தச் சட்டம் குறித்து விளக்கப்பட்டிருக்கும். ரஜினியை அணுகி நீங்கள் கட்சி தொடங்கப்போகிறீர்கள், இஸ்லாமியர்களின் ஓட்டு உங்களுக்குத்தான் என்று சொல்வதன் மூலமாக அவர் அவர்களுக்கு குரல் கொடுப்பது போன்ற அரசியலை பார்த்து எங்களுக்கு கசந்துவிட்டது. ரஜினிகாந்தை வைத்து திசை திருப்பினாலும் ஒருபோதும் சிஏஏ திரும்பப்பெறப்படாது என்றார்.
இதையும் படிங்க: சிஏஏ விவகாரத்தில் ரஜினி டயலாக்கை சொல்லும் அமைச்சர்!