சேலம்: உழவர் சந்தைகளில் 294 டன் காய்கள், பழங்கள் என ரூ.86 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, மேட்டூர், சூரமங்கலம், இளம்பிள்ளை, எடப்பாடி, தாதாகப்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
மார்கழி அமாவாசை தினத்தை முன்னிட்டு வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்டவை இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 11 உழவர் சந்தைகளில் 1118 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறி 260 டன் மற்றும் பழங்கள் 34 டன் என மொத்தம் 294.24 டன் சுமார் ரூ. 86.74 லட்சத்திற்கு விற்பனையாகின.
இதில் சூரமங்கலம் உழவர் சந்தையில் 62 டன் காய்கள் ரூ.16 லட்சத்திற்கும், தாதகாப்பட்டியில் 39 டன் காய்கள் ரூ.14 லட்சத்திற்கும், ஆத்தூரில் 49 டன் காய்கள் ரூ.17 லட்சத்திற்கும் விற்பனையானது.
சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பஜார் தெரு, குரங்குசாவடி, பழைய பேருந்து நிலையம், பால் மார்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் காய்கறி விற்பனை அதிகமாக இருந்தது.
மண் பானை, கரும்பு விற்பனை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை, மஞ்சள் கொத்து, செங்கரும்பு விற்பனையும் அதிகமாக இருந்தது. பொங்கல் வைக்க மண் பானைகள் ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனையானது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100 வரை விற்பனையானது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.50 வரையும், காப்புக் காட்டு பூ ஒரு கட்டு ரூ.5 முதல் ரூ.10 வரையும் விற்பனையானது.