சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் பந்தல் சாகுபடி முறையில் புடலை, பாகல், பீர்க்கன் உள்ளிட்ட காய்கறிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. குறுகிய கால பயிர்ச் சாகுபடி என்பதால் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பந்தல் சாகுபடி முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள் தற்போது அதிக விளைச்சலைத் தந்துள்ளன. அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட காய்கறிகளை பயிரிட்டு நல்ல வருமானம் ஈட்டக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார இழப்பைச் சந்தித்த விவசாயிகள்
இந்நிலையில் கரோனா கால ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், தோட்டத்தில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.
புடலை, பாகல், பீர்க்கன், பூசணி ஆகியவை நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 கிலோ வரை அறுவடை செய்யும் நிலையிலிருந்தும் கொள்முதல் செய்ய முறையான ஏற்பாடுகள் இல்லாததால், அவை செடியிலேயே முற்றி பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பனமரத்துப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த தும்பல்பட்டி விவசாயிகள் குப்பன், சக்திவேல் ஆகியோர் கூறுகையில், "எங்களிடம் உள்ள சிறிய அளவிலான விவசாய நிலங்களில் குறைந்த காலப் பயிரான புடலை, பாகல், பீர்க்கன், பூசணி ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறோம். இந்த முறை ஊரடங்கு என்பதால் விளையும் காய்கறிகளை வெளியில் கொண்டு சென்று விற்க முடியவில்லை. இதனால் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறோம்.
இதுதொடர்பாக தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் என்னென்ன காய்கறிகள் விளைய வைத்திருக்கிறீர்கள் என்று பட்டியல் கேட்டனர். அதையும் அனுப்பினோம். அதன் பிறகு நேரடியாக தோட்டத்திற்கு வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து கொள்வார்கள் என்று தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கொள்முதல் செய்ய எந்த வியாபாரியும் வரவில்லை. வாகனப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகள் இந்த பகுதிக்கு வாகனத்தில் வர முடியாமல் உள்ளனர். எனவே தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து காய்கறி வியாபாரிகள் கொள்முதல் செய்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் "என்று வலியுறுத்தினர்.
விவசாயிகளின் புகார்கள் குறித்து பனமரத்துப்பட்டி வட்டார தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சேகரிடம் கேட்டபோது,"ஊரடங்கு காலத்தில் காய்கறி விற்பனை தடைபடக் கூடாது என்பதற்காக வியாபாரிகள், விவசாயிகளுக்கு வாகன பாஸ் வழங்கியிருக்கிறோம்.
இதுவரை 45 பேருக்கு பாஸ் வழங்கி அவர்கள் தங்களது வாகனங்கள் மூலம் காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர் .
இதையும் படிங்க:
'வானில் ஓர் கண்ணாமூச்சி' - இன்று சூரிய கிரகணம்