சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள சேலம் பாலி கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில், தருமபுரி மாவட்டம் லலிகம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி வெங்கட்டம்மாள் பிரசவத்திற்காக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகப்பேறு பிரிவில் அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையில், வெங்கட்டம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்று மாலை பாலிகிளினிக் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்களின் தவறான சிகிச்சைக்கு கண்டனம் தெரிவித்தும் வெங்கட்டம்மாள் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் உறவினர்களுடன் சேர்ந்து, சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மருத்துவமனையின் முன்பு பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சாலை ராம். சக்திவேல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.