சேலம்: தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணை கரோனா தொற்று நிவாரண நிதி, 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம்(ஜூன்.15) தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன்.15) சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்து உள்ள மேச்சேரி அருகில் உள்ள அரியகவுண்டனூர் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள், நிவாரண நிதி வழங்கப்பட்டது. அப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நிவாரண பொருட்களை வழங்க சென்ற பொழுது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .
இதில் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். தாக்குதலில் பாமக தொண்டர்கள் சிலருக்கு மண்டை உடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அனைவரையும் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி தடைபட்டு நேற்று (ஜூன்.16) முதல் மீண்டும் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது.