சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கனககிரி சத்யா நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்தில் கோவையைச் சேர்ந்த செல்வராஜ் (48). இவர், காலணி ரப்பர் கட்டிங் தொழிலகம் நடத்தி வருகிறார்.
இந்தத் தொழிலகத்தில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், பணிபுரிந்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் (31) என்பவர் வட மாநிலத்தில் உள்ளவர்களை இந்த தொழிலகத்திற்கு அழைத்து வந்து பணியில் சேர்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், நசுருதீன் அங்கு பணிபுரியும் மற்ற தொழிலாளிகளிடம் பணியை சரியாக செய்யுமாறு கண்டித்து வந்துள்ளார். இதில், பிகார் மாநில தொழிலாளர்களுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (பிப். 02) அதே போல், தொழிலாளர்களிடம் பணியை கட்சிதமாக செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சக தொழிலாளர்களான ஜெயகுமார், அமித்ஷா மதுபோதையில் நசுருதீனிடம் தகராறு செய்துள்ளனர். ஒருகட்டத்தில் தகராறு முற்றி, இருவரும் சேர்ந்து நசுருதீன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த உரிமையாளர் செல்வராஜ் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து, சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட நசுருதீனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஜெயக்குமார், அமித்ஷா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’நீ எப்படிடா சாமிக்கு படைக்கலாம்’: பூசாரியை அடித்துக் கொன்ற இளைஞர் கைது