இதுதொடர்பாக சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அலுவலகத்தில் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில், சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், டீசல் மீதான மாநில அரசின் வரி விதிப்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு மார்ச் 15ஆம் தேதி முதற்கொண்டு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 6 தென் மாநிலங்களில் சுமார் 26 லட்சம் வாகனங்கள் இயங்காது.
முன்னதாக வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதுகுறித்து வரும் மார்ச் 5 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில் முடிவெடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து