சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா (28). இவர், கிச்சி பாளையத்தைச் சேர்ந்த ராம் (25) என்கிற ராம்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு, ஸ்ரேயாவை விட்டு ராம் விலகிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரேயா, ராம்குமாரை சந்தித்து செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் ராம்குமார் ஸ்ரேயாவை தாக்கியுள்ளார்.
மேலும், அவரும் அவரது குடும்பத்தினரும் ஸ்ரேயாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனமுடைந்த ஸ்ரேயா இன்று (பிப்.27) மதியம், தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது, அவரை மீட்ட உடனிருந்த திருநங்கைகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு ஸ்ரேயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேட்டி அளித்த திருநங்கைகள், “ராம் ஏற்கனவே குண்டாஸில் கைதாகி சிறைக்குச் சென்று வெளியே வந்தவர். அவருக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஸ்ரேயா தான் செய்தார். இந்த நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ராமின் குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பணத்தையும் இழந்து, தன்னையும் விட்டு நிரந்தரமாக ராம் பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஸ்ரேயா தற்கொலைக்கு முயற்சி செய்தார். ராம் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க கிச்சிபாளையம் காவல் துறையினர் முன்வர வேண்டும்” என தெரிவித்தனர்.