சேலம் மாவட்டம் முழுவதும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, இன்று சேலம் ராமகிருஷ்ணா சாலை அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருவாகனத்தில் வந்துகொண்டிருந்த வசந்தகுமார், அவர் மனைவி சசிகலா, மகன் வசந்த் ஆகியோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர்.
ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினர் காவல் துறையினரை சோதனை செய்யவிடாமல் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் அக்குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில், அங்கு வந்த வசந்தகுமாரின் நண்பர் பழனிசாமி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் தன் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். இதையடுத்து காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி வசந்தகுமாரின் குடும்பத்தினரையும், அவரது நண்பர் பழனிசாமியையும் கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனர்.