கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவிவரும் நிலையில் இந்தியாவில் அதன் பாதிப்பை முழுமையாக தடுத்திடும் வகையில் மத்திய - மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ முகாம்கள், சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.
இன்று சேலம் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகளின் இருக்கைகள், கைப்பிடிகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதமாக மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்துகொண்டு பேருந்துகளில் மருந்து தெளிக்கும் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வைரஸ் தொற்றுத் தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மக்கள் நல அலுவலர் பார்த்திபன் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி - நாமக்கல் கோழிப்பண்ணையில் பாதுகாப்புத் தீவிரம்