சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் கட்சி நிர்வாகிகளுடன், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”ஜெயலலிதா இருக்கும்போது ஏராளமான திட்டங்கள் தந்தார். அவரது மறைவுக்குப் பிறகும் ஏராளமான திட்டங்கள் தரப்பட்டுள்ளன. சமீபத்தில் சேலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை என்றும், குறிப்பாக எடப்பாடி தொகுதியில் எந்த திட்டமும் செய்யவில்லை எனக் கூறி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 ஏரிகள் நிரம்பும்படியான மேட்டூர் உபரிநீர் திட்டம் தந்து, அதிமுக ஆட்சியில் அதில் ஒரு பகுதி முடிக்கப்பட்டு விட்டது. திமுக பொறுப்பேற்றபின், இந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டனர். இது ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
பின்தங்கிய எடப்பாடி தொகுதிக்குள் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஜெயலலிதா இருக்கும்போது தரப்பட்டது. எனது தலைமையிலான ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் மட்டும் பாலிடெக்னிக் கல்லூரி, பிஎட் கல்லூரி தந்தோம். நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டது.
கால்நடை மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தந்தோம். எடப்பாடி நகரத்தில் 30 வார்டுகளிலும் கூட்டு குடிநீர் தந்தோம். நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் தந்தோம். வணிக வளாகம், பாலங்கள், பூங்கா, நியாய விலைக்கடைகள், எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, தீயணைப்பு நிலையங்கள், தரமான சாலைகள், 16 பேருந்துகள் தந்துள்ளோம். தற்போது வேண்டும் என்றே என்மீது தவறான, பொய்யான தகவலை ஸ்டாலின் கூறியது கண்டிக்கத்தக்கது” என்றார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் மூழ்கி விலைமதிப்பில்லா 7 உயிர்களை இழந்துள்ளோம். மணல் அள்ளியதால் அங்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தவிர்க்க முடியும். மேலும் இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு உயர்த்தி வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
திமுக ஒன்றுமே செய்யவில்லை: மேலும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ’திமுக ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பும் வந்துவிடும். அது அவர்களின் தொழிலாக உள்ளது.அதுமட்டுமல்லாமல் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை தங்குதடையில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. இதனைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத நிலையில் உள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் செய்யமுடியவில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு திசைதிருப்புகின்றனர். திமுக வாக்குறுதியை நம்பி நகை அடகு வைத்தவர்கள், கல்விக்கடன் வாங்கியவர்கள் ஏமாந்துவிட்டனர்.
விலைவாசி உயர்வுக்குக் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வே. மத்திய அரசு இரண்டுமுறை விலை குறைப்பு செய்தபின்னும், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி விலை குறைப்பு செய்யவில்லை. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது? அகவிலைப்படிகூட கொடுக்கமுடியவில்லை. கடந்த ஓராண்டு காலத்தில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றியதாக விளம்பரம் செய்கின்றனர். இதற்கு ஊடகங்களும் உடந்தையாக உள்ளன' என்று தெரிவித்தார்.
திமுக தேர்தல் நேரத்தில் கூறியபடி நீட் தேர்வு ரத்து என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சியில் செய்ததையேதான் இவர்களும் செய்கின்றனர் என்றார். திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவிவருகிறது என்று கூறிய அவர், இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் என்று ஸ்டாலின் கூறுகிறார்; அனைத்து துறைகளும் முடங்கி விட்டன. ஊழலில்தான் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
ஆன்லைன் சூதாட்டம் என்னும் ஆபத்து: ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட வேண்டாம் என டிஜிபியே கூறுகிறார். இந்த விளையாட்டில் முதலில் பணம் வரும், பின்னர் தற்கொலை செய்துகொள்ளும் சூழல் ஏற்படும் என்று கூறுகிறார். ஆனால் இந்த விசயத்தில் தமிழ்நாடு அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. எடப்பாடி தொகுதியில் விசைத்தறி பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காலத்தைக் கடந்து வந்த நிலையில் தற்போது நூல் விலை ஏற்றத்தால் நெசவாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவேண்டும் எனச் சட்டமன்றத்தில் பேசினேன். சென்னைக்கு வந்த பிரதமரிடமும் இதுகுறித்து வலியுறுத்தி உள்ளேன். ஆனால், முதலமைச்சரோ வருமானம் வருவது தொடர்பான கோரிக்கையைத்தான் பிரதமரிடம் முன் வைத்தார். மக்கள் பாதிப்பிற்குள்ளாகும் கோரிக்கை பற்றிப் பேசவில்லை' என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்கத் தடை!