சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத் தொடக்க விழாவும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், 'வேளாண் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருகிறது.
இந்த பணி முடிந்ததும் ஒரு குடும்பத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். புதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவதுதான் எங்கள் லட்சியம்.
தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத பகுதியாக மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் தலைவாசல் பகுதியில் உலகத் தரத்தில் 1,500 ஏக்கரில் கால்நடைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. கால்நடைப் பூங்கா அமைந்தபிறகு , தலைவாசல், கெங்கவல்லி பகுதி அபரிமிதமான வளர்ச்சி அடையும்.
ஆட்சிக்கு கலங்கம் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு குற்றாச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் தெரிவித்துவருகின்றனர். இருந்தாலும் எங்கள் லட்சியப் பாதையில் நாங்கள் பயணிப்போம்’ என்றார்.