அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வதற்காக விமானம் மூலம் சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. திமுக தலைவருக்கும் அமமுகவுக்கும் உள்ள தொடர்பு இதன்மூலம் வெளிவந்திருக்கிறது. எங்கள் கட்சியைச் சார்ந்த எம்எல்ஏக்களை நாங்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த சபாநாயகரிடம் மனு அளிக்கிறோம். அதற்கு ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார்?
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி இன்னும் மூன்று மாதங்களில் விரைவாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். ஸ்டாலின் இதுவரைக்கும் கீழே இறங்கி சென்றதே கிடையாது. இப்போது தோல்வி பயத்தின் காரணமாக பல்வேறு உத்திகளைக் கையாண்டு மக்களை சந்திப்பதாக ஊடகத்தின் வாயிலாக பார்த்தேன். அந்த அளவிற்கு அவருக்கு தோல்வி பயம் வந்துள்ளது” என்றார்.
மேலும், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக இந்த ஆண்டு இயற்கை ஒத்துழைத்தால் குறித்த நேரத்தில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.