சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்திருந்தார். இதேபோல் பால் உற்பத்திச் சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகளுடன் நேரில் சந்தித்துவலியுறுத்தினர்.
இதனடிப்படையில் பசும்பால் லிட்டருக்கு நான்கு ரூபாயும் எருமை பால் லிட்டருக்கு ஆறு ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கட்டணம் உயர்ந்திருக்கிறது. இவற்றை கருத்தில்கொண்டு ஐந்து வருடங்களுக்கு பிறகு பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் கூலி உயர்வு அதிகரித்திருக்கிறது. அதைப்போல்தான் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கையைத்தான் தமிழ்நாடு அரசு பின்பற்றும். அதில் நாங்கள் திட்டவட்டமாக உள்ளோம். புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் வெளிப்படையாகத்தான் அரசு செயல்படுகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை" என்று தெரிவித்தார்.