சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து அதன் உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நீர் செல்லும் பாதையில் வசிக்கும் பொதுமக்களிடம், 'நீர் அதிகளவிலாக வந்து கொண்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நீர் செல்லும் பாதையில் செல்ஃபி எடுக்கவோ, சுற்றிப் பார்க்கவோ வேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையில் காலை 50,000 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் படிப்படியாக நீர் வரத்தானது முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் சின்ன கண்ணூர் பகுதியில் உள்ள மூன்று கல்லூரி மாணவர்கள் செல்ஃபி எடுப்பதற்காக நீர் செல்லும் பகுதிக்குச்சென்றுள்ளனர்.
அப்போது, அதிக அளவில் நீர் வந்ததால் நீரின் நடுவில் மூவரும் சிக்கிக்கொண்டனர். உடனடியாக இதனையறிந்த காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் மூவரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர், மூன்று பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த பிரபு, தினேஷ், ரவி என்னும் மூன்று இளைஞர்கள் ஆவர். மீட்கப்பட்ட இவர்களை, முதலுதவி சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதில், “மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால், காவிரிக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!