சேலம் மாநகர் நரசோதிப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் கடந்த 23ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு தமது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த, 45 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனது தெரிந்தது. இதனைத்தொடர்ந்து அவர் அளித்தப் புகாரின் பேரில், சூரமங்கலம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சேலம் ரயில்வே ஜங்ஷனில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் மேல் அருங்குணத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் ஜெய்சங்கர் என்பதும், அங்கமுத்து வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
மேலும் சேலம் அடுத்த கோட்டகவுண்டம்பட்டியில், கடந்த 4ஆம் தேதி மேகநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, இரண்டு சவரன் நகையைத் திருடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து பணம், நகை, ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஜெய்சங்கர் மீது விழுப்புரம், சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலம் ரவுடிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!