சேலம் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிப்பு வாகனம், நடமாடும் கரோனா கண்டறிதல் சோதனை மைய வாகனம் இரண்டையும் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. தற்போது 144 தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சேலத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் வெளி மாவட்ட, மாநிலங்களிலிருந்து வந்த நபர்களால்தான். மொத்தம் 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் வெளிமாவட்ட, மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. விமானம் மூலமாக வரும் பயணிகளில் கரோனா உறுதிப்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.
சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள் உள்ளன. அவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றன" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், "சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேலத்தில் முழு ஊரடங்கு இல்லை என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை. அப்படி எந்த முடிவையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே இந்த கரோனா பாதுகாப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி கேட்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு