சேலம்: மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு, சேலம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து வருகிறது.
ஆனால் இந்த திட்டங்களையும் நிதியையும் தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்துவது கிடையாது. மக்கள் நலனுக்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்தாலும் அதை தமிழ்நாடு அரசு மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை. அதே போல மத்திய அரசின் திட்டங்களை பெயரை மாற்றி தமிழ்நாடு அரசு பயன்படுத்துகிறது. பெயர் வாங்குகிறது. குறிப்பாக மத்திய அரசின் நிதியை மற்ற பணிகளுக்கு செலவிடுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 53 சதவீதம் வீடுகளுக்கு மட்டுமே இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தும் இந்த இலக்கு முடிக்கப்படாததால் இந்த ஜல் சக்தி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா முழுவதும் 700 சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. அதில் 8 பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் 2 பள்ளிகளின் பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கி உள்ளன. மேலும் 2 பள்ளிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பள்ளிகளில் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கவும் மாணவர்கள், மாணவிகள் என்று இருபாலரும் சமமாக பயிலும் வகையிலும் இந்த திட்டத்தின் நோக்கம் கொண்டுள்ளது..
மத்திய அரசின் பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பு இல்லாததால் மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நிதியை பெற்று தங்கள் பங்களிப்போடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
ஜல்சக்தி திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு ஆவணங்கள் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. மின்சார இணைப்புக்கான ஆவணங்கள் இருந்தால் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மற்ற ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பிரதமர் படம் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி படமும் முதலமைச்சர் படம் மட்டுமே உள்ளது. பொதுவாக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டு துப்பாக்கி தயாரித்த விவகாரம்: சேலம் அருகே என்ஐஏ சோதனை