சேலம் மக்களவை உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் இன்று மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்து, மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏழை எளிய விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் மாட்டுக் கொட்டகை மற்றும் ஆட்டுக் கொட்டகை அமைப்பதற்கான நிதியை, ஆளுங்கட்சியினர் அதிகார பலம் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு மாற்றி நிதி மோசடி செய்திருப்பதாக ஆதாரத்துடன் புகார் மனுவினை வழங்கினார்.
அந்த மனுவில், சேலம் வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மனோன்மணியின் மகன் ஸ்ரீ பாலாஜி சுகுமார் பெயரிலும், பனமரத்துப்பட்டி ஒன்றியத் தலைவர் ஜெகநாதன் தன் மகன் சுகதீஸ்வரன் பெயரிலும் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை மாட்டுக் கொட்டகை மற்றும் ஆட்டுக் கொட்டகை அமைப்பதற்கான நிதியை மோசடி செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், “ஆளும் கட்சியினர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அரசு நிதியை கையாடல் செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.