சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள திமிரிகோட்டை பகுதியில் தனியார் தாபா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகமானது ஓமலூர் - மேட்டூர் செல்லும் சாலையின் ஓரம் இருப்பதால், சாலையில் பயணிப்போர் குடும்பத்துடன் வந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப். 1) இரவு ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு சாப்பிட வந்துள்ளனர். அப்பொழுது இரவு நேரம் என்பதால் இளைஞர்கள் கேட்ட உணவு இல்லை என உணவக ஊழியர்கள் தெரிவித்து, வேறு உணவைச் சாப்பிடக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உடனடியாக ஓமலூர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இளைஞர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த உணவகம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த உரிமையாளர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து மற்ற பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுத்துள்ளனர்.
தீவைத்தவர்கள் சாப்பிடவந்த இளைஞர்களா அல்லது வேறு யாராவது தீவைத்தார்களா எனப் பல்வேறு கோணங்களில் ஓமலூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி தகராறு செய்த இளைஞர்களைத் தேடிவருகின்றனர்.
இந்தத் தீ விபத்தில் உயிர்ச்சேதம் இல்லாத நிலையில் சுமார் ஐந்தாயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. ஓமலூர் பகுதிகளில் உள்ள தாபா உணவகங்களில் மது அருந்துவதை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினால் மட்டுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காணாமல்போன மகனை தேடிய பெற்றோர்: இரவு வீடு திரும்பிய சிறுவன்!